தமிழகத்தில் கொரோனாவின் பிடியில் சிக்கிக்கொண்டு அனைத்து தரப்பு மக்களும் தவித்து வருகின்றனர். அந்த வகையில் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கொரோனா பரவலால் பள்ளி மாணவர்கள் தாங்கள் விரும்பியபடி பள்ளிக்கு சென்று படிப்பை தொடர முடியாத நிலை கடந்த ஓராண்டாக நீடிக்கிறது.
மேலும், கடந்த ஆண்டு பள்ளிக்கு செல்லாமலேயே பிளஸ்-2 தவிர அனைத்து வகுப்பு மாணவர்களும் பாஸ் ஆனார்கள். எனினும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தின. அரசு பள்ளிகளில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டன. இந்தநிலையில் அரசு பள்ளிகள் 2021- 2022-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்க பள்ளி கல்வித்துறை சார்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கையை நடத்துமாறு அறிவுறுத்தி இருந்த போதிலும் பெற்றோர்கள் மத்தியில் ஆர்வம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று தெரியவில்லை.
கொரோனா பரவல் முடிவுக்கு வந்த பிறகு குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையிலேயே பல பெற்றோர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண்களை வழங்குவது என்பது பற்றி கல்வித்துறை அதிகாரிகள் இன்னும் முடிவு எதுவும் அறிவிக்கவில்லை. எனவே இந்த விவகாரத்தில் குழப்பமான நிலையே நீடிப்பதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதால் விரைவில் மாற்றம் வருமா என்றும் ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.