தமிழகத்தில் +12 தேர்வு ரத்துக்கு அரசின் விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் கொரோனாவின் தாக்கம் காரணமாக சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஒடிசா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்து பிளஸ்டூ பொதுத் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தனர். இதையடுத்து தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு நடைபெறுமா..? அல்லது ரத்து செய்யப்படுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
பின்னர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பின்னர் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. பின்னர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருப்பதால் பொதுத்தேர்வு ரத்து செய்வதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
பிளஸ் 2 தேர்வு ரத்து செய்ததை எதிர்த்து ராம்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், அரசின் விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க முடியாது. பிளஸ் 2 தேர்வு ரத்து செய்ததை எதிர்க்கும் ராம்குமார் மனுவுக்கு 23-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.