தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அறிவுரை கூறியுள்ளார்.
திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களிலுள்ள பள்ளிகளின் சார்பில் நடத்தப்படும் இணையவழி வகுப்புகளின்போது தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை என, மத்திய மண்டல ஐ.ஜி., வே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று கல்வி கற்க முடியாத நிலை உள்ளது. எனவே, மாணவ, மாணவிகளின் நலன் கருதி இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சமயத்தில் சில பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களிலுள்ள பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், ஆசிரியர்களால் பாலியல் ரீதியான தொந்தரவுகளைத் தவிர்ப்பதற்காகவும், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தக்கூடிய பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்களுடன் மத்திய மண்டல ஐ.ஜி., வே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூன் 08) காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில், 255 பள்ளிகளின் முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.
முழுவதும் பதிவு செய்ய வேண்டும்
அப்போது அவர், “முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி இணையவழி வகுப்புகள் உரிய முறைப்படுத்துதலுடன் நடைபெற வேண்டும். அனைத்து இணையவழி வகுப்புகளும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினரால் முழுவதுமாகப் பதிவு செய்யப்பட்டு, அவற்றினைப் பாதுகாப்பாகப் பராமரிக்க வேண்டும்.
பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த 2 நபர்கள் மூலம் குறிப்பிட்ட இடைவெளியில் அந்தப் பதிவுகள் முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை எளிதில் அளித்திடும் வகையில் காவல்துறையின் உதவி எண்களைப் பள்ளி நிர்வாகத்தினர் மாணவ, மாணவிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.
மாணவ, மாணவிகளிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி, தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்
தங்கள் பள்ளி மூலம் நடத்தப்படும் இணையவழி வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்கள் கண்ணியமான முறையில் செயல்படுவதையும், மாணவ, மாணவிகள் எவ்வித அச்சமும், தயக்கமுமின்றி அவ்வகுப்புகளில் பயில்வதையும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும்.
மத்திய மண்டலத்திலுள்ள மாவட்டங்களில் செயல்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாளும் பிரிவின் காவல் அதிகாரிகள், தங்களது பகுதிக்குட்பட்ட பள்ளி நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு இணையம் வழியாகப் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.
மாவட்ட வாரியாக இன்ஸ்பெக்டர் நியமனம்
பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளிப்போர் மீது புகார் தெரிவிப்பதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட வாரியாக இன்ஸ்பெக்டர்களை நியமித்து ஐ.ஜி., வே.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.