திருச்சியில் இயங்கிவரும் அரசு பள்ளியில் கடந்த மூன்று ஆண்டுகளாக முதல் வகுப்பில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
தமிழகத்தில், கொரோனாவின் தாக்கத்தால் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாமல் அதிகளவிலான மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் மட்டும் 4 நாட்களில் 1, 500 பேர் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
திருச்சி மாநகரம் எடமலைப்பட்டி புதூரில் அரசுத் தொடக்கப்பள்ளி 1932ம் ஆண்டு முதல் உள்ளது.
இதே வளாகத்தில் உயர்நிலைப் பள்ளியும் தனியாக உள்ளது. இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி கூடுதல் கவனம் பெற்று, அரசுப் பள்ளிகளுக்கு முன்மாதிரியாக உள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதல் வகுப்பில் 100 மாணவர்களுக்கு மேல் சேர்ந்துள்ளனர். நடப்பாண்டில் தற்போது வரை முதல் வகுப்பில் 105 பேர் உட்பட 165 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மொத்த மாணவர் எண்ணிக்கை 250 ஆக இருந்த நிலையில், தற்போது மொத்த மாணவர் எண்ணிக்கை 650யைக் கடந்துள்ளது. சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர், ஸ்மார்ட் போர்ட், திறமையான ஆசிரியர்கள், சிறப்பு பயிற்சிகள் அளிப்பதால், சாதாரண குடும்பத்திலிருந்து சாதனையாளர்களாக வளர்கிறோம் என்கிறார்கள் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை வென்ற 5 வகுப்பு மாணவிகள்.
மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அதற்கேற்ப ஆசிரியர்கள் எண்ணிக்கை இல்லை என்றும் இன்னும் 8 ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது. பாடத்திட்டத்தோடு சிலம்பம், கராத்தே, செஸ், ஆங்கிலப் பயிற்சி, தனித்திறன் மேம்பாடு உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தங்களின் பணம், புரவலர்களின் நிதியுதவியோடும் பல்வேறு மாணவர் மேம்பாட்டுத் திட்டங்களை பள்ளி ஆசிரியர்கள் நடைமுறைப்படுத்தியுள்ளனர். இதுவே இந்த பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க காரணம் என்கிறார்கள் பெற்றோர்கள்.
சிறப்பாக செயல்பட்டுவரும் இந்த பள்ளியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சென்று பாராட்டியுள்ளார். அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க இது போன்ற முன்மாதிரி அரசுப் பள்ளிகளை அரசு ஊக்கவிக்க வேண்டும் என்றும் அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேலும் நவீனப்படுத்த வேண்டும் என்பதும் கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.