கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் உருவான கொரோனா பெருந்தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் இன்று வரை முழுமையாக திறக்கப்படவில்லை.
இதற்கிடையில், நோய் தொற்று குறைந்து வந்த சூழலில் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டது. அந்த வகையில், தற்போது கொரோனா 2ம் அலைக்கு பின்பாகவும் இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்க இருக்கிறது. இதற்கிடையில், கடந்த வாரத்தில் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளில் இருந்து மேலும் சில தளர்வுகளை அளித்திருந்த அரசு, நவம்பர் 1ம் தேதி முதல் நர்சரி வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறப்பதாக அறிவித்திருந்தது. ஆனால், அந்த அறிவிப்புகள் தவறுதலாக வெளியானது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பின்னர் தெளிவுபடுத்தினார்.
அந்த வகையில் மழலையர் மற்றும் விளையாட்டுத் துறை பள்ளிகள் திறப்பது குறித்து மட்டுமே அரசு ஆலோசனை செய்து வந்ததாகவும் பள்ளிகளை திறப்பது குறித்து வெளியானது தவறான செய்தி என்றும் அவர் தெரிவித்திருந்தார். இப்போது, மழலையர் மற்றும் விளையாட்டு பள்ளிகள் அனைத்தும் இயங்காமல் உள்ளதால் அதை நடத்தி வரும் நிர்வாகங்கள் வாடகை உள்ளிட்ட சில பிரச்னைகளை சந்தித்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மழலையர் பள்ளி நிர்வாகி சாமுவேல் ராஜ் என்பவர், 'தமிழகத்தில் மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அரசு அறிவிக்க வேண்டும். தவிர, 1ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர்களிடையே அச்சம் நிலவுகிறது. இதை கவனத்தில் கொண்டு அரசு முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். மேலும், பள்ளிகளை திறப்பதற்கு முன்னர் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய முறையான வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவிக்க வேண்டும்' என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.