பள்ளிகளை மூட வேண்டாம் உலக வங்கி வலியுறுத்தல்
"கொரோனா பரவல் இருந்தாலும், அதற்காக பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் இப்போது இல்லை," என, உலக வங்கியின் கல்வி இயக்குனர் ஜெய்மீ சாவேத்ரா கூறினார்.
உலக வங்கியின் சர்வதேச கல்வி இயக்குனர் ஜெய்மீ சாவேத்ரா கூறியதாவது:
உலகம் முழுதும் தற்போது கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதற்காக பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் இப்போது இல்லை; அது, கடைசி முயற்சியாகத்தான் இருக்க வேண்டும். பள்ளிகளில் தொற்று பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
உணவகங்கள், மதுக்கூடங்கள் மற்றும் வணிக வளாகங்களை திறக்க அனுமதித்து விட்டு, பள்ளிகளை மட்டும் மூடுவது நியாயமல்ல.
கடந்த 2020ல் கொரோனா பரவிய போது நம்மிடம் அதுகுறித்த புரிதல் இல்லை. அதனால் பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்களை மூடினோம். இப்போது நிலைமை அப்படி இல்லை. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திய பிறகே பள்ளிகளை திறக்க வேண்டும் என எந்த நாடுமே வலியுறுத்தவில்லை.பள்ளிகள் மூடப்படுவதால் இந்தியாவில் கற்றல் வறுமை 50 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.