PGTRB ஆசிரியர் தேர்வில் தடுப்பூசி போட்டால்தான் அனுமதி
முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியில் 2207 இடங்களுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க நாளை மறுநாள் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் கல்வி வாரியமான டி.ஆர்.பி. சார்பில் இந்த தேர்வு கணினி வழியில் நடத்தப்படுகிறது.
மாநிலம் முழுதும் 160 முதல் 180 மையங்கள் வரை அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2.6 லட்சம் பட்டதாரிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தேர்வுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் 'தேர்வு எழுத வருவோர் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணையும் செலுத்தியிருக்க வேண்டும். 'ஊசி செலுத்தாதவர்கள் தேர்வு நாளுக்கு 72 மணி நேரத்துக்கு முன் ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா சோதனை செய்த சான்றிதழ் எடுத்து வர வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு பள்ளிக் கல்வி துறை மற்றும் டி.ஆர்.பி.க்கு தேர்வர்கள் இ- - மெயில் அனுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து 'நெட் செட்' பட்டதாரிகள் சங்க செயலர் தங்கமுனியாண்டி கூறியதாவது:இதற்கு முன் நடந்த எந்த தேர்விலும் இந்த கட்டுப்பாடு இல்லை. டி.ஆர்.பி. மட்டுமே திடீரென கட்டுப்பாடு விதித்துள்ளது. தேர்வுக்கான அறிவிக்கையிலும் குறிப்பிடவில்லை. எனவே தேர்வர்கள் பாதிக்காத வகையில் இந்த கட்டுப்பாடுக்கு தளர்வு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.