IAS, IPS உள்ளிட்ட பதவிகளுக்கான மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு: தமிழகத்தில் 86 பேர் தேர்ச்சி பெற்று சாதனை - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Friday, March 18, 2022

IAS, IPS உள்ளிட்ட பதவிகளுக்கான மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு: தமிழகத்தில் 86 பேர் தேர்ச்சி பெற்று சாதனை

IAS, IPS உள்ளிட்ட பதவிகளுக்கான மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு: தமிழகத்தில் 86 பேர் தேர்ச்சி பெற்று சாதனை.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மெயின் தேர்வு ரிசல்ட் வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் 86 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு ஏப்ரல் 5ம் தேதி தொடங்குகிறது.


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டு தோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது. கடந்த ஆண்டு (2021ம் ஆண்டுக்கானது) 712 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் 4ம் தேதி வெளியிடப்பட்டது. மார்ச் 24ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் சுமார் 5 லட்சம் பட்டதாரிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு அக்டோபர் 10ம் தேதி நடந்தது. தொடர்ந்து அக்டோபர் 29ம் தேதி முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் ெவளியிடப்பட்டது.

இத்தேர்வில் இந்தியா முழுவதும் 9214 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தை பொறுத்த வரை சுமார் 400 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு கடந்த ஜனவரி 7, 8, 9, 15, 16ம் தேதிகளில் நடந்தது. இந்த நிலையில் மெயின் தேர்வுக்கான ரிசல்ட்டை யுபிஎஸ்சி தனது இணையதளமான www.upsc.gov.inல் நேற்றிரவு வெளியிட்டுள்ளது.


இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: யுபிஎஸ்சி 2021ம் ஆண்டு குடிமைப் பணிகளுக்கான மெயின் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா முழுவதும் 1805 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து 86 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


இதில் 63 மாணவர்கள் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்றவர்கள். ஒட்டுமொத்தமாக சென்னை, பெங்களுர், திருவனந்தபுரத்தில் 396 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம்தேதி நேர்முகத் தேர்வு நடைபெறும். மெயின் தேர்வு, நேர்முக தேர்வின் அடிப்படையில் வெற்றி பெற்றவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


நேர்முக தேர்வு முடிந்த பின்னர் நேர்முக தேர்வு, மெயின் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படும். பயிற்சிக்கு பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் சேர்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.