ஆலமரத்தடியில் ஓர் அழகிய மேடை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி. - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Wednesday, April 20, 2022

ஆலமரத்தடியில் ஓர் அழகிய மேடை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி.

 சென்னை, லேடி வில்லிங்டன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற "நம் பள்ளி நம் பெருமை" பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.



லேடி வில்லிங்டன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் ஆலமரத்தடியிலேயே அழகிய மேடை ஒன்று அமைக்கப்பட்டு, அந்த மேடையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில், முதல்வர் ஸ்டாலினுடன், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, அன்பில் மகேஷ், சென்னை மேயர் பிரியா, எம்.பி. தயாநிதி மாறன், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். அனைவருக்கும் தனித்தனி இருக்கைகளுக்கு பதிலாக மேடையிலேயே அமரும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளையும் விருந்தினர்கள் பார்வையிட்டனர்.

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வினை தொடங்கி வைத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.


அவரது உரையில்,


பள்ளிப் பருவம் என்பது திரும்பக் கிடைக்காத ஒரு மகிழ்ச்சியான காலம். அத்தகைய பள்ளிப் பருவத்தில் இருக்கக்கூடிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை, என்னுடைய பாராட்டுக்களை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், உங்களுக்கு மகிழ்ச்சியைச் சொல்கிறபோது, வாழ்த்துகளைச் சொல்கிறபோது ஒரு ஏக்கத்தோடு அந்த வாழ்த்தை நான் சொல்கிறேன். ஏக்கத்தோடு அந்த வாழ்த்தைச் சொல்வதற்கு என்ன காரணம் என்று கேட்டீர்களானால், இத்தகைய மகிழ்ச்சியும், மன நிறைவும், கொண்டாட்டமும் வேறு எந்தப் பருவத்திலும் யாருக்கும் கிடைக்காத பருவம் இந்தப் பருவம். இத்தகைய பள்ளிப் பருவ காலத்தை நீங்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த நிகழ்ச்சி மிகவும் புகழ் பெற்று விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய லேடி வில்லிங்டன் மேல்நிலைப் பள்ளியில் நடந்து கொண்டிருக்கிறது. அது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரிய, பாராட்டுக்குரிய ஒன்றாக அமைந்திருக்கிறது. காரணம் என்னவென்று கேட்டீர்களானால், மிகப் பெரிய சீர்திருத்த எண்ணத்தொடு சகோதரி ஆர்.எஸ். சுப்பலட்சுமி அம்மையார் அவர்களால் இந்தப் பள்ளியும், பயிற்சிப் பள்ளியும் தொடங்கப்பட்டது. விஜயரங்கம் அறக்கட்டளையால் மீனவப் பெண் குழந்தைகளுக்கான பள்ளியாக இது செயல்பட்டு வந்திருக்கிறது. 1914-ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பள்ளியாக இதனுடைய தரம் உயர்த்தப்பட்டு, 1922-ஆம் ஆண்டு பள்ளிக்கான கட்டடம் கட்டப்பட்டு 'லேடி விலிங்டன் உயர்நிலைப் பள்ளி' எனப் பெயர் மாற்றம் பெற்றது. சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்த வில்லிங்டன் அவர்களுடைய துணைவியார் லேடி வில்லிங்டன் பெயரில் 1922-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் நாள்று இந்தப் பள்ளி துவங்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட வரலாற்றுக்குரிய இந்தப் புகழ்பெற்ற இந்தப் பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது என்பது உள்ளபடியே மிக பொருத்தமான ஒன்றாக அமைந்திருக்கிறது.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து - என்கிறார் அய்யன் திருவள்ளுவர் அவர்கள். ஒரு தலைமுறையில் பெறக்கூடிய கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும். உங்களிடம் இருந்து யாராலும் அதை பறிக்க முடியாது, திருட முடியாத ஒரு சொத்து இருக்கு என்றால், அது உங்களது கல்வி மட்டும்தான் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. அதனால்தான் பள்ளிக் கல்விக்கு இந்த அரசு மிகமிக முக்கியத்துவத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது,


எத்தனை மிகமிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். அந்த அளவிற்கு, கல்விக்காக இந்த அரசு மிக மிக மிக முக்கியத்துவத்தை தொடர்ந்து கொடுத்து வருகிறது.

மாணவர்கள் - ஆசிரியர்கள் - பெற்றோர் ஆகிய மூவரது சிந்தனையும் ஒரே நேர்கோட்டில் இருந்தால்தான், கல்வி நீரோடை மிக சீராகச் செல்லும். அதில் எவர் ஒருவர் தடங்கல் போட்டாலும் கல்வியானது தடம் புரண்டுவிடும். உலகப் புகழ் பெற்ற கவிஞர் கலீல் ஜிப்ரான் அவர்கள் எழுதியிருக்கக்கூடிய வரிகளைத்தான் இங்கு இருக்கக்கூடிய பெற்றோர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்.

உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல, அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள். ஆனால் அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை. அவர்களுக்கு நீங்கள் உங்கள் அன்பைத் தரலாம், சிந்தனையை அல்ல. அவர்களுக்கு என அழகான சிந்தனைகள் உண்டு. நீங்கள் அவர்களைப் போல ஆவதற்கு உழையுங்கள், ஆனால் அவர்களை உங்களைப் போல ஆக்கிவிடாதீர்கள் - என்பதுதான் கலீல் ஜிப்ரான் எழுதிய கவிதை வரிகள். மிகப் பெரிய நீண்ட கவிதை அது. அதிலிருந்து சில வரிகளைத்தான் இப்போது உங்களிடத்தில் நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.


உங்கள் குழந்தைகள் என்னவாக ஆக வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அவர்களுக்குத் நீங்கள் தடை போடாமல், அவர்களுக்கு உதவி செய்யுங்கள், வழிகாட்டுங்கள். உங்கள் கனவுகளை தயவு செய்து அவர்கள் மீது திணிக்காதீர்கள் என்று நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.


பெற்றோராக இருந்தாலும் ஆசிரியர்களாக இருந்தாலும், பள்ளிகளாக இருந்தாலும் மாணவச் செல்வங்களை வளர்த்தெடுப்பததை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். புத்தகங்களே! குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்று நமது கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள் எழுதியிருக்கிறார். இதை மனதில் வைத்துக்கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும்.


குழந்தைகளின் கல்வி என்பது ஒரு சமூகத்தின் எதிர்காலத்திற்கான அடித்தளம். அவர்களுக்கு அளிக்கப்படும் தரமான கல்விதான் சமுதாய முன்னேற்றத்தின் திறவுகோல். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மகிழ்ச்சியோடும் பாதுகாப்போடும் கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவதுதான் நமது அரசினுடைய நோக்கம், குறிக்கோள், இலட்சியம்.


பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதிலும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் இந்திய துணைக்கண்டத்திற்கே தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.


கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.36 ஆயிரத்து 895 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது. அரசுப் பள்ளிகளை முழுமையாக மேம்படுத்துவதற்காக பள்ளி மேலாண்மைக் குழுக்களை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளைப் பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்கள் போன்றோர் இந்தப் பள்ளி மேலாண்மைக் குழுவில் இடம் பெறுவார்கள்.


ஒவ்வொரு அரசுப் பள்ளியையும் தன்னிறைவு பெற்ற பள்ளியாக மாற வேண்டும். அந்தப் பள்ளியின் தேவைகள் என்ன என்று அறிந்து அதை வழங்க வேண்டும். குழந்தைகளுக்குத் தரமான, சமமான கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும், அதற்குரிய நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும். இதனைச் செயல்படுத்துவதற்காகத் தான் பள்ளி மேலாண்மைக் குழுவை நாம் இப்போது அமைத்திருக்கிறோம்.



 குழந்தைகளின் கற்றல் அடைவை மேம்பாடு அடையச் செய்தல்

 பள்ளி வளங்களைப் பராமரித்தல்

 பள்ளியின் சுற்றுப்புற சூழலைத் தூய்மையாக்குதல்

 இடைநிற்றலை தவிர்த்தல் மற்றும் இடைநின்ற குழந்தைகளை

வயதுக்கேற்ற வகுப்பில் மீண்டும் பள்ளியில் சேர்த்தல்

 பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குதல்

போன்ற செயல்பாடுகளில் புதிய மேலாண்மைக் குழுக்கள் ஆக்கப்பூர்வமாகசெயலாற்ற வேண்டும்.

 அனைத்து வகை வன்முறைகளில் இருந்தும் குழந்தைகளை நாம் பாதுகாக்க வேண்டும்.

 குழந்தைகள் ஒருவருடன் ஒருவர் அன்புடன் பழகும் சூழலை உருவாக்க வேண்டும்.

இதனைச் செயல்படுத்துவதற்காகத் தான் இந்தக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.


பள்ளிகளின் பெருமையை மீட்டெடுத்து, நமது குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைக்க தமிழ்நாடு அரசு முன்னெடுக்கக்கூடிய இந்த முயற்சிக்குக் கை கொடுக்க வாருங்கள்! என்று உங்களை எல்லாம் மிகுந்த பணிவோடு, உரிமையோடு விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்தி பள்ளிகளை வளப்படுத்துவோம் ! நம் பள்ளி! நம் பெருமை என ஆனால்தான் நம் நாடு, நம் பெருமை என ஆகும் என்பதை மனதில் வைத்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.