கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது?
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்று வரும் பொதுத்தேர்வு மே இறுதியில் முடிவடைகிறது.
இதனிடையே, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், மாநிலத்தில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்டவை ஜூன் இரண்டாம் வாரம் வரை நடைபெறுவதன் காரணமாக, பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்த நிலையில், ஜூன் 4-ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விரைவில் பள்ளிகள் திறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட உள்ளது.
பள்ளிகள் திறப்பு தாமதமாவதன் காரணமாக ஏற்படும் கற்றல் இழப்பை சரிசெய்யும் வகையில், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.