அரசுப்பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்துசெய்யப்படவில்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Friday, July 15, 2022

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்துசெய்யப்படவில்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி

 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்துசெய்யப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.



முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த நாள், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய முயற்சியால் இன்று முதல் அடுத்த 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது.


காமராஜரின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்து, 2006ஆம் ஆண்டில் அரசாணை வெளியிட்டவர், முதலமைச்சர் கருணாநிதி. காமராஜருக்கு சென்னை, கன்னியாகுமரியில் நினைவிடம் கட்டியது, காமராஜர் சாலை என பெயர் வைத்தது, விமான நிலையத்துக்கு காமராஜர் பெயர் வைத்தது என்று அனைத்து பெருமையும் கருணாநிதியையே சேரும்" எனக் கூறினார்.


இதனையடுத்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "மாணவர்களின் வாழ்த்துகளால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார். குலக்கல்வியை எதிர்த்ததால் தான் காமராஜர் முதலமைச்சரானார். பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அதற்கான அடித்தளமிட்டு, கல்வியில் தனிக்கவனம் செலுத்தியவர் காமராஜர்.


NEP என்றால் No Education Policy. எனவே தான் State Education Policy-ஐ மாநில அரசு வடிவமைத்து வருவதாகவும், நமக்கான கல்வியை நாமே உருவாக்கிக்கொள்வோம்" எனக் கூறினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குணமடைந்து வீடு திரும்பிய உடன், பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் ஆகியவற்றைத் தொடங்கி வைப்பார்.


அவருடைய உடல் நலனில் நல்ல முன்னேற்றம் இருந்து வருகிறது. விரைவில் வீடு திரும்புவார். அரசுப் பள்ளிகளில் லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை. அரசுப்பள்ளிகளில் மீண்டும் லேப்டாப் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. லேப்டாப் வழங்குவதில் பல்வேறு பிரச்னைகள் இருக்கிறது.


லேப்டாப் கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்படாமல் இருக்கிறது. ஆண்டிற்கு 5 லட்சத்து 50,000 லேப்டாப் வழங்கப்பட வேண்டும். அதனை கொள்முதல் செய்யத் தயராக இருந்தாலும், நிறுவனங்களால் அளிக்க முடியாத நிலை இருக்கிறது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் டேப் (Tab) வழங்குவோம் என்று கூறியிருந்த நிலையில், அலுவலர்களிடம் விவாதித்ததில் லேப்டாப் தான் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில் டேப் வழங்கும் திட்டத்திற்குப் பதிலாக லேப்டாப் தொடர்ந்து வழங்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!


கரோனா பிரச்னை உள்ளிட்ட சில காரணங்களுக்காக கடந்த சில ஆண்டுகளாக லேப்டாப்கள் மாநிலம் முழுவதும் வழங்கப்படாத நிலையில், தற்போது 11 லட்சம் லேப்டாப்கள் வழங்க வேண்டிய நிலை இருக்கிறது. அவற்றுக்குத் தேவையான நிதி ஒதுக்குவது உள்ளிட்டப் பல்வேறு பணிகளில் அரசு அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்.


ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர கூடுதலாக ஒரு தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணை எண் 149-ஐ ரத்து செய்வது தொடர்பாக முதலமைச்சரிடம் பேசி முடிவு எடுக்கப்படும். அரசுப்பள்ளிகளில் 9 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்திருக்கிறார்கள்.


பள்ளி மாணவர்கள் எப்படி உடை அணிய வேண்டும்? கைகளில் சாதிக் கயிறு, டாட்டூ போட்டுக்கொள்ளக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கெனவே அமலில் உள்ளது" எனத் தெரிவித்தார்.