அரசுப் பள்ளிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆய்வுக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் சென்னைதலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் மற்றும் துறைசார் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
கல்வி தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) தேர்வு செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பணியாணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவரைப் பற்றி வரும் தகவல் உண்மையாக இருந்தால், ஏற்கெனவே விண்ணப்பித்திருந்த நபர்களில் இருந்து தகுதியான ஒரு நபர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவார்.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள் 10 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. அதில் முதுநிலை ஆசிரியர்பணி நியமனம் செப்டம்பருக்குள் முடிக்கப்படும்.படிப்படியாக இதர ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.