TNTET Exam 2022: ஆசிரியர் தகுதித் தேர்வு திடீரென மாற்றம் - புதிய தேதிகளை அறிவித்த TRB - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Tuesday, August 9, 2022

TNTET Exam 2022: ஆசிரியர் தகுதித் தேர்வு திடீரென மாற்றம் - புதிய தேதிகளை அறிவித்த TRB

 ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு முதல் தாளுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ள நிலையில், டிஆர்பி புதிய தேதிகளை அறிவித்துள்ளது.

அரசு கொண்டுவந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.


இதற்கிடையே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது. அந்நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் டெட் சான்றிதழ் செல்லும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு 2011-ல் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும்.


முன்னதாக 2022ஆம் ஆண்டு தேர்வுக்கு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. ஏப்ரல் மாதத்தில் விண்ணப்பப் பதிவு நடைபெற்றது. விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஜூலை 11 முதல் 16ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. முன்னதாக ஆகஸ்ட் மாதம்‌ 25 முதல்‌ 31 வரை உள்ள தேதிகளில்‌ தாள்‌- 1 ற்கு மட்டும்‌ முதற்கட்டமாகத் தேர்வுகள்‌ நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக டிஆர்பி தெரிவித்துள்ளது.

 இதுகுறித்து ஆசிரியர்‌ தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


''தமிழ்நாடு ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு 2022ஆம்‌ ஆண்டிற்கான ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தின்‌ அறிவிக்கை எண்‌.01/2022, நாள்‌ 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது. 06.07.2022 பத்திரிகை செய்தியின்படி ஆகஸ்டு மாதம்‌ 25 முதல்‌ 31 வரை உள்ள தேதிகளில்‌ தாள்‌-1 ற்கு மட்டும்‌ முதற்கட்டமாகத் தேர்வுகள்‌ கணினிவழியில்‌ மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட் டுள்ளது என்ற விவரம்‌ தெரிவிக்கப்பட்டது.


தற்பொழுது நிர்வாக காரணங்களினால்‌, தாள்‌- 1ற்கான தேர்வு 10.09.2022 முதல்‌ 15.09.2022 வரை நடத்தப்பட உள்ளது.


மேற்படி கணினி வழித்‌ தேர்விற்காக பயிற்சித்‌ தேர்வு மேற்கொள்ள விரும்பும்‌ தேர்வர்கள்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணைய தளத்தில்‌ பயிற்சியினை மேற்கொள்வதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும்‌. அனைத்து பணிநாடுநர்களும்‌ இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம்‌.


இது குறித்த அறிவிக்கை, தேர்வுகால அட்டவணை மற்றும்‌ அனுமதிச்சீட்டு வழங்கும்‌ விவரம்‌ செப்டம்பர்‌ முதல்‌ வாரத்தில்‌ அறிவிக்கப்படும்‌''.


இவ்வாறு ஆசிரியர்‌ தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தேர்வர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.