நெருங்கிய பருவமழை - பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு | - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Saturday, October 8, 2022

நெருங்கிய பருவமழை - பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு |

      

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 16ம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Video 👇👇👇



 

தமிழகத்தில் அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதி தொடங்கி 4 மாதங்கள் பெய்வது வழக்கம். இந்த ஆண்டு தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழையின் போது அதிக அளவில் மழை பெய்யும் சாதகமான சூழ்நிலை இருப்பதால், தமிழக அரசு பருவமழை சேதங்களை சமாளிக்கவும், பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ளதால், மழைக்காலத்தில் பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், பள்ளி வளாகத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும். இவற்றை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். அனைத்து வகை பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள் பணியாளர்கள் பாதுகாப்பு சார்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்துக்குள் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ள திறந்தநிலை கிணறுகள், நீர்நிலைத் தொட்டிகள், இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் ஏதாவது இருந்தால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் பயன்பாடு இல்லாமல் உள்ள ஆழ்துளை கிணறுகள், கழிவு நீர் தொட்டிகள், கிணறுகள், நீர் சேமிப்பு தொட்டிகள் போன்றவை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதா என்று உறுதி செய்ய வேண்டும்.


மூடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மற்றும் தொட்டிகள் உள்ள இடங்களை அடையாள குறியிட்டு தனியாக அடையாளப்படுத்த வேண்டும். அவற்றை தரை மட்டத்தில் இருந்து உயர்த்தி பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர்மின் அழுத்த மின் கம்பங்கள் மற்றும் அறுந்து தொங்கக் கூடிய மின் கம்பிகள் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் இணைப்புகள் சரியாக உள்ளதா என்றும், மின் கசிவு மின் சுற்று கோளாறுகள் ஏதாவது உள்ளதா என்றும் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தேவை ஏற்பட்டால் மின் இணைப்பை துண்டித்து வைக்கலாம். பள்ளி வளாகத்தில், விழும்நிலையில் மரங்கள் ஏதாவது இருந்தால், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். ஆபத்தான நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும். மின் சுவிட்ச்கள் சரியாக உள்ளதா மழைநீர் படாத வகையில் உள்ளதா என்பதையும் தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.


பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களின் மேற்கூரைகள் உறுதித் தன்மையையும், மேற்கூரையில் நீர் தேங்காத வகையிலும், உடனடியாக தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைக்காலம் என்பதால் பள்ளி வளாகத்தில் தேங்கும் தண்ணீர் கொசுக்கள் உற்பத்திக்கு வழி வகுக்கும் என்பதால் வளாகத்தில் தண்ணீர் தேங்காத வகையில் பராமரிக்க வேண்டும். மேல் தளத்தில் தடைபட்ட வடிகால்கள், மாடி படிக்கட்டுகளை சுத்தம் செய்ய வேண்டும். பலவீனமான மற்றும் பழுதடைந்துள்ள கட்டிடங்களை பயன்படுத்தகூடாது. சுகாதாரம் மற்றும் உயிர் பாதுகாப்புக்கு செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாதவை குறித்தும் மாணவர்களுக்கு வாரம்தோறும் ஒரு நாள் காலை வழிபாட்டு கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.