தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த கீழாம்பல் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்த நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன். இவருக்கு மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.
இப்படியான ஒரு விருதை பெற்ற ஆசிரியர் ராமச்சந்திரன் மீது வருமான வரி தாக்கல் செய்ததில் திரும்பப் பெறும் தொகையில் முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து, 120 (B) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், கடந்த ஒரு மாதமாக அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் அவர் குற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததால், நேற்று அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், ராமச்சந்திரனை மதுரை அழைத்துச் சென்ற சிபிஐ அதிகாரிகள், நீதிமன்ற காவலுக்கு அனுப்ப உள்ளனர்.
இந்நிலையில், ஆசிரியர் ராமச்சந்திரனை, சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அவருக்கு வழங்கப்பட்ட விருதை திரும்ப பெறவும் பரிந்துரை செய்து உள்ளார்.