PG TRB - முதுநிலை ஆசிரியராக தேர்வு எழுதிய 85,000 பேர் தமிழில் 'பெயில்!' - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Sunday, November 30, 2025

PG TRB - முதுநிலை ஆசிரியராக தேர்வு எழுதிய 85,000 பேர் தமிழில் 'பெயில்!'

                                          


முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தேர்வு எழுதிய 85,000 பேர் ... 

தாய்மொழியே தெரியாமல் ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த அவலம்...


முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வேலையில் சேர தேர்வு எழுதியவர்களில், 85,000 பேர் தமிழ் பாடத்தில் 'பெயில்' ஆகியுள்ளனர். அவர்களின் தாய்மொழி தமிழ் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுனர் ஆகிய பணியிடங்களுக்கு, 1,996 பேரை தேர்வு செய்ய கடந்த அக். 12ல் தேர்வு நடந்தது. முதுநிலை பட்டதாரிகள் 2.36 லட்சம் பேர் எழுதினர். முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. கட்டாய தமிழ் பாட தேர்வில் 85,000த்துக்கு அதிகமானோர் பெயில் ஆகியுள்ளனர்.


தமிழக அரசு வேலையில் சேர்பவர்களுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிய வேண்டும் என்பதற்காக, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் 2022ல் தமிழ் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ் தேர்வில் மொத்தம் 50 மதிப்பெண் உண்டு. அதில் 20 மதிப்பெண் எடுத்தால் பாஸ் ஆகலாம். பாஸ் ஆனால் தான், பாடம் சார்ந்த விடைத்தாளை மதிப்பீடு செய்வார்கள்.


இத்தேர்வில், 85,000 பேருக்கு மேல், அதாவது 36 சதவீதம் பேர் 20 மார்க் கூட பெறாமல் தோல்வி அடைந்துள்ளனர். பிரதான பாடம் சார்ந்த தேர்வை இவர்கள் சிறப்பாக எழுதியிருந்தாலும், தமிழில் தோற்றதால் அந்த விடைத்தாள்கள் திருத்தப்படாது. அதனால், இவர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.


இந்த தேர்வை எழுதியவர்கள் இளநிலை, முதுநிலை, கல்வியியல் என குறைந்தது மூன்று பட்டங்களை பெற்றவர்கள். அதற்கு மேல் எம்.பில்., பிஎச்.டி. பட்டம் பெற்றவர்களும் தேர்வு எழுதியுள்ளனர்.


இதில் கட்டாய தமிழ் பாட தேர்வின் கேள்விகள், 10ம் வகுப்பு மாணவர்கள் எழுதும் அளவில் தான் இருக்கும். அதிலும் 40 சதவீத மதிப்பெண் எடுக்க முடியாமல் பெயில் ஆகியிருப்பது, கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர்கள் கூறியதாவது:


தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாகக் கூட எடுத்து படிக்காமல், பள்ளி படிப்பை முடிக்கும் நிலை உள்ளது. தமிழை இரண்டாம் பாடமாக எடுத்தால்கூட, பல தனியார் பள்ளிகளில், அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.


இதனால் தான், இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. பிரதான பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் கூட, ஆசிரியர் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் எதிர்காலமே வீணாகியுள்ளது.


முனைவர் என்கிற டாக்டர் பட்டம் பெற்றவர்களும், ஐந்து பட்டங்களை பெற்றவர்களும் கூட, தாய்மொழியான தமிழில் 20 மதிப்பெண் எடுக்க முடியாமல் தோல்வி அடைந்துள்ளது பெரும் அவமானம். நமது கல்வி முறை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை இதிலிருந்து உணரலாம்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.