அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகம் பராமரிக்கப்படாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அண்ணா நினைவுநூற்றாண்டு நூலகத்தில் இன்று ஆய்வு நடத்தினார். அதன் பின்னர் செய்தி யாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின், துறை சார்ந்த முக்கியமான பிரச்சினைகள் எது எது என உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, பராமரிப்பு இல்லாமல் இருக்கும் திட்டங்களை ஆய்வு செய்ய வேண்டும் என அறிவித்து இருந்தார். அவரின் வழிகாட்டுதல்படி உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆய்வு செய்யப்பட்டது. இந்த நூலகம் பராமரிக்கப்படாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. பல அரசு அதிகாரிகள் இங்கே பயின்று தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் இந்த நூலகம் பராமரிக் காமல் அப்படியே உள்ளது. நூலகத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக, கல்வி தொலைக்காட்சி நிறுத்தப்பட மாட்டாது. இன்னும் ஆக்கப்பூர்வமான பல நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டு புதுமையான கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடர்ந்து வழங்கப்படும்.
கல்விக் கட்டணம் தொடர்பாக, அதிகாரிகள், பெற்றோர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி நல்லதொரு முடிவை அரசு மேற்கொள்ளும். பெற்றோர்களுடைய நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.