ஆசிரியர் காலியிட விபரங்கள் அனுப்ப, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மாணவர் சேர்க்கை அதிகரித்தும், புதிய பணியிடங்கள் தோற்றுவிக்காமல், கலந்தாய்வு நடத்தாமல் இருப்பதாக, நமது நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாவட்ட வாரியாக, உடற்கல்வி இடைநிலை, பட்டதாரி, சிறப்பு ஆசிரியர்களுக்கு பாடவாரியாக, காலியிடங்கள் திரட்டும் பணிகள் நடக்கின்றன.பதவி வாரியாக, மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடங்கள், காலியிடங்கள் பட்டியலை பிரத்யேகமாக தயாரித்து, வரும் 10ம் தேதிக்குள் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், ஏற்கனவே கடந்த 2019, ஆகஸ்ட், மாதம், மாணவர்களின்றி உபரியாக இருந்த ஆசிரியர் பணியிடங்கள் ஒப்படைக்கப்பட்டன.
இதை காலியிடமாக அறிவிக்க கூடாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், வட்டார வாரியாக ஆசிரியர் காலியிடங்கள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டன. இதை மீண்டும் சரிபார்த்து, பட்டியல் உறுதி செய்ய, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் விரைவில் கவுன்சிலிங் நடத்தி, காலியிடங்களை நிரப்புவதோடு, புதிய ஆசிரியர் நியமனத்திற்கும், 'கிரீன் சிக்னல்' கிடைத்து விட்டதாக, ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.