தமிழகத்தில் 31ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுமா அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Tuesday, January 18, 2022

தமிழகத்தில் 31ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுமா அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

 


கொரோனா அதிகரித்து வருவதால் மனதளவில் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.





தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்புதான் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட்டு வருவதால் முதலில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை வருகிற 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.



பள்ளிகளுக்கு விடுமுறை

இதன்பிறகு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வருகிற 31-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளிகள் விடுமுறை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்.


31-ம் தேதிக்கு பிறகு என்ன முடிவு?

விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ' ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருந்தாலும், மனதளவில் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் விடுமுறை விடப்பட்டுள்ளது. 31-ம் தேதிக்கு பிறகு சூழ்நிலை எப்படி உள்ளது? என்பது குறித்து ஆய்வு செய்து அதன் பின்னர் உரிய முடிவு எடுக்கப்படும்' என்று கூறினார்.


இதுபோன்று இனியும் நடக்கக்கூடாது.

சமீபத்தில் நடந்த நிகழ்வு போன்று இனியும் தமிழகத்தில் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் கூடுதல் கட்டடங்கள் தரமாக கட்டப்பட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார் இதனைத் தொடர்ந்துதான் தமிழகம் முழுவதும் 3030 பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு உள்ளது பள்ளிக் கட்டிடத்தின் முக்கியம் எவ்வளவு தூரம் உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்று அவர் தெரிவித்தார்.


இல்லம் தேடி கல்வித் திட்டம்.

கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் நோக்கமாக உள்ளது இதற்காக தான் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ் சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை மட்டும்தான் மக்களால் உற்று நோக்கப்படுகிறது என்று கூறினார்.


ஆசிரியர்கள் கண்டிப்பதை தவறாக எண்ணக்கூடாது.

பொதுத்தேர்வு என்பது மிக மிக முக்கியமான தேர்வு. அதனை கவனத்தில் கொண்டு மாணவ மாணவிகள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கிய அவர் மாணவ மாணவிகள் எந்தெந்த கல்லூரிகளில் சேர வேண்டும் என்று கவனமாக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்றும் பெருமிதத்துடன் கூறினார், ''ஆசிரியர்கள்தான் உங்களுடைய இரண்டாவது பெற்றோர். ஆசிரியர்கள் கண்டிப்பதை மாணவ-மாணவிகள் தவறாக எண்ணக்கூடாது உங்கள் மேல் உள்ள அக்கறையால் தான் ஆசிரியர்கள் உங்களை கண்டிக்கின்றனர். எனவே ஆசிரியர்களை மதிக்க வேண்டும் என்றும் பேசினார்.