கொரொனோ தொற்று அதிகரித்து வரக்கூடிய சூழலில், பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை அந்தந்த பள்ளிகளிலேயே நடத்துவதற்கு தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மே மாதம் முதல் தொடங்கி மே இறுதி வரை 10 ,11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளன . இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஐஐடி வளாகத்தில் 60க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது
இத்தகைய சூழலில் 10 மற்றும் 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சுமார் 3,500 மையங்களில் நடைபெறு உள்ளது. வழக்கமான முறையில் குறிப்பிட்ட மையங்களில் மட்டும் பொதுதேர்வுகளை நடத்துவதற்கு பதில் , அனைத்து பள்ளிகளையும் தேர்வு மையங்களாக அறிவித்தால், மாணவர்கள் போதிய சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வு எழுதுவதுடன், தேர்வு மையங்களில் அதிகளவு மாணவர்கள் கூடுவதை தவிர்க்க இயலும் என பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளையும் தேர்வு மையங்களாக அமைக்க நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் என பெரும்பான்மையானோர் தடுப்பூசி எடுத்திருந்தாலும் தொற்று ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படக்கூடிய நிலை உள்ளது.
ஆசிரியர்களில் பலர் ரத்தக்கொதிப்பு சர்க்கரை உள்ளிட்ட இணை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கக்கூடிய நிலையில், நோய் பரவல் வேகத்தை கணக்கில்கொண்டு அந்தந்த பள்ளி வளாகங்கள் அனைத்தையும் தேர்வு மையங்களாக அறிவிக்கும் பட்சத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் பதட்டமில்லாத சூழ்நிலையில் பணியாற்ற கூடிய நிலை ஏற்படுவதுடன் மாணவர்களும் அச்சமின்றி பொதுத்தேர்வை எதிர்கொள்ள கூடிய நிலை உண்டாகும் என்கின்றனர் ஆசிரியர்கள்.