குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அதைப் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
2022ம் ஆண்டு நடைபெற உள்ள குரூப் 2, 2ஏ தேர்வு, மே 21-ம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்கி நடைபெறும். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற உள்ளது. நேர்காணல் கொண்ட பதவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.1.35 லட்சம் வரை ஊதியம் அளிக்கப்பட உள்ளது.
முதன்மைத் தேர்வுகள் தமிழ்நாட்டில் 32 மையங்களில், காலை 9 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 32 நகரங்களில் 117 மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும். மாலையில் நடைபெறும் தேர்வில் எந்த நேர மாற்றமும் இல்லை. தேர்வில் ஜெல் பேனா, பால் பாயிண்ட் பேனாக்களைப் பயன்படுத்தலாம்.
இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள், ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளன. அதற்குப் பிறகு முதன்மைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும். துறை ரீதியான பணி நியமனம் குறித்து மார்ச் 3ஆம் தேதி விரிவான அறிவிப்பு வெளியிடப்படும்.
இந்நிலையில் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் ஓடிஆர் (OTR) கணக்கு வாயிலாக ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?
இதுகுறித்துத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''குரூப் II மற்றும் IIஏ தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR) மூலமாக மட்டும் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்'' என்று தெரிவித்துள்ளார்.
தேர்வு முறைகேடுகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை:
* அப்ஜெக்டிவ் முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்படும் என்றும் விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வர்களின் விவரங்கள், இனி தேர்வு முடிந்தபின் தனியாகப் பிரிக்கப்படும்.
* தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
* அதிகத் தேர்வர்களைக் கொண்ட தேர்வுகளையும் கணினி வழித் தேர்வாக நடத்தத் திட்டமிடப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் 100 மதிப்பெண்களுக்குத் தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே அடுத்தகட்ட தேர்விற்கு எடுத்துக்கொள்ளப்படுவர்.