தமிழகத்தில் காலாண்டு விடுமுறையின் போது சிறப்பு வகுப்புகள்? பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 1-ம் தேதி முதல் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
சிறப்பு வகுப்புகள்:
நாடு முழுவதும் கடந்த ஆண்டுகளில் கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடிய நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த நேரத்தில் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனை சரி செய்ய மாற்று முறையாக மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடம் நடத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்தவுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 2022 – 2023-ம் கல்வியாண்டில் வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது.
இந்த நிலையில் 1 – 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 21 முதல் 30-ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடத்தப்பட்டது. மேலும் இந்த ஆண்டு முதன் முதலாக 4,5ம் வகுப்பு மாணவர்களுக்கு மொபைல் ஆப் வாயிலாக காலாண்டு தேர்வுக்கு இணையான தொகுத்தறியும் திறன் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து அக்டோபர் 1-ம் தேதி முதல் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி நிர்வாகங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வந்தது.
இதனையடுத்து தமிழக தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிகளை திறந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளது. ஒரு வேளை பொதுத்தேர்வு எழுதும் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேவைப்பட்டால் மாவட்டக் கல்வி அலுவலரின் அனுமதி பெற்று அரை நாள் மட்டும் சிறப்பு வகுப்பு நடத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.