இயக்குனர் முதல் DEOக்கள் வரை காலியாக உள்ள பணியிடங்கள் - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Saturday, September 26, 2026

இயக்குனர் முதல் DEOக்கள் வரை காலியாக உள்ள பணியிடங்கள்

 மதுரை: கல்வித்துறையில் இயக்குநர், 45 டி.இ.ஓ.,க்கள். 8 சி.இ.ஓ.,க்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்தும் முடிவில் உள்ளன.


துறை இயக்குநராக இருந்த கண்ணப்பன் கடந்த ஜூலை 31ல் ஓய்வு பெற்றார். அதன் பின் தற்போது வரை அப்பணியிடம் நிரப்பப்படவில்லை. எஸ்.சி.இ.ஆர்.டி. இயக்குநர் லதா கூடுதல் பொறுப்பு வகித்தாலும், ரெகுலர் இயக்குநர் உத்தரவு போல் அத்துறை அலுவலர்களிடையே மதிக்கப்படுவதில்லை என புகார் உள்ளது.   


இதுபோல் ராமநாதபுரம், கடலுார்,திருவள்ளூர் உட்பட 8 மாவட்ட சி.இ.ஓ.,க்கள், 45 டி.இ.ஓ.,க்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. 6 மாதங்களுக்கு முன்பே சீனியாரிட்டி பட்டியல் தயாராக இருந்தும் தற்போது வரை டி.இ.ஓ., பதவி உயர்வு அறிவிக்கவில்லை. தலைமையாசிரியர் கூடுதல் பொறுப்பு வகிப்பதால் அவர்களுக்கு பள்ளிப் பணி, நிர்வாகப் பணி என இரட்டை பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.   


தவிர, உயர்நிலையில் 1300, மேல்நிலையில் 300, நடுநிலையில் 2 ஆயிரம், தொடக்க பள்ளிகளில் 3 ஆயிரம் என தலைமையாசிரியர் பணியிடங்கள் ஆண்டுக்கணக்கில் காலியாக உள்ளன. இவற்றையும், சிறப்பு 'டெட்' எழுதும் ஆசிரியருக்கு பணி அனுபவம், உயர்கல்வி தகுதிக்கு சிறப்பு மதிப்பெண் வழங்க அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை என சங்கங்கள் அதிருப்தியில் உள்ளன.   


தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநிலச் செயலாளர் குமரேசன் கூறியதாவது:   இத்துறையில் இதுவரை இவ்வளவு எண்ணிக்கையில் காலிப் பணியிடங்கள் இருந்தது இல்லை. காலை உணவுத் திட்டம், நலத் திட்டங்கள், எமிஸ் ஆன்லைன் பதிவேற்ற பணிகளால் கற்பித்தல் பணிகள் கடுமையாக பாதித்துள்ளன. கல்வி இயக்குநர் பணியிடம் 50 நாட்களுக்கும் மேல் காலியாக இருந்ததாக வரலாறு இல்லை. இந்நிலையை கண்டித்து ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில் விரைவில் போராட்டம் அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.