ஒழுக்கப் பயிற்சிப் பயன்கள் (Disciplinary Values)
கணிதக் கருத்துகளை அறிந்து கொள்வதைக் காட்டிலும் கணித முறைகளில் திறனை வளர்த்துக் கொள்வதே கணிதம் கற்பதன் முக்கிய நோக்கமாகும். உயர்ந்த கணிதக் கருத்துகளை மட்டும் அறிந்தவன் நல்ல கணித வல்லுநனாகமாட்டாள் ஆனால், கணித உண்மைகளைப் புத்திக் கூர்மையோடு பயன் படுத்திக் கொள்கிறவன் எவனோ, புதிய கணித உண்மைகளைக் கண்டுபிடிக்கிறவன் எவனோ, அல்லது மறந்து போன பல கருத்துகளையும் மறுபடியும் அமைக்கும் ஆற்றல் பெற்றவன் எவனோ அவனே நல்ல கணித ஆற்றல் படைத்தவனாவான் கணிதத் திறமையானது கணித அறிவன்று, அதனைப் பயன் படுத்தும் ஆற்றலேயாகும். உதாரணமாக, வர்க்க மூலம் காணும் முறையையும், அதமப் பொது மடங்கு கண்டுபிடிக்கும் வழி யையும் மறந்து போகலாம். ஆனால், இவற்றைக் கற்றுக் கொள்ளும் போது ஏற்பட்ட நற்பழக்கங்களாகிய சிந்தித்தல் கருத்தை ஒருமுகப்படுத்துதல், திருத்தமாகச் செயற்படல் போன்றனவற்றை என்றும் மறக்கமுடியாது.
பொது விதிகளைத் தொகுத்தறிவதற்கும், கருத்தியலான வற்றைச் சிந்திப்பதற்கும் இயற்கணிதம் நம் மனத்தைப் பழக்குகின்றது. எண்கணிதத்தில் வளர்ந்த சிந்தனையாற்றல் இயற்கணிதத்தைப் புரிந்து கொள்வதற்கும் கணிதத் தொடர்பான அறிவியலில் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் உதவுகின்றது
பிரச்சினைக்குரிய ஆதாரங்களிலிருந்து சரியான முடிவைத் தருக்க முறையில் காணுவதற்கு யூக்ளிடின் வடிவியல் முறை பழக்குகிறது. கருத்தியல் ஆய்வு முறையும், பகுத்தறி ஆய்வு முறையும் எல்லோருக்கும் எக்காலத்திலும் பயன் தருபவையாகும் மனத்திற்குப் பயிற்சியளிப்பதற்கு எண்கணிதம் சிறந்த அடிப்படையாகும்.
ஏனெனில்
1. இதன் செயல்முறைகள் (operations) பகுத்தறிவாய்வுக்கு எளிய உதாரணங்களாகும். அதே சமயத்தில் திறமை வாய்ந்த போதனையால் விதிகளைக் கற்பது தொகுத்தறி திறனுக்கு நல்ல பயிற்சியாகும்
2. செயல்முறைகளைக் காரண காரியத்தோடு தொடர்பு படுத்தி அமைக்கும் திறனை வளர்க்க உதவுகிறது தன்னம்பிக்கையை வளர்க்கிறது
3 .சுய சிந்தனைக்கு வழிவகுக்கிறது மற்ற பாடங்களில் பிறர் அறிந்த மெய்க்கூற்றுகளும் கருத்துகளும், திரும்பவும் அப்படியே கூறும் விதத்தில் சேகரிப்படுகின்றன. ஆகவே, அப்பாடங்களில் நினைவாற்றல் முக்கியமான நிலையைக் கொண்டிருக்கிறது. ஆனால், கணிதத்தில் சுயசிந்தனையும் புத்திக் கூர்மையுடன் ஆராயும் ஆற்றலுமே தேவையான திறமைகளாகும்
4 . காரண காரியங்களை ஆய்வதில் பயிற்சியைக் கொடுக்கும் நோக்கத்துடனேயே உயர்நிலைப் பள்ளிகளில் கணிதம் போதிக்கப்படுகின்றது. மேலும், ஒழுங்கான பழக்கவழக்கங் களில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சில கடினமான சிக்கல்களைத் தீர்ப்பது மாணவனுக்குப் புதிய கண்டுபிடிப்புப் போன்றதாகும் கணிதம் எளிதான செயல் முறைகளில் தொடங்கி, படிப்படியாகக் கடினமான செயல்முறை களுக்கு மாணவர்களைப் பழக்கப்படுத்துகிறது. அம்மாதிரியான சிக்கல்களைத் தீர்க்கும் செயலில் அதிகப் பழக்கம் ஏற்படும் போது, அவை மனத்திறமைகளை வளர்ப்பதோடு, புதிதாகக் கண்டுபிடிக்கவும் ஆராயவும் வழிவகுக்கின்றன. புத்திக் கூர்மையோடும், தெளிவோடும், விவேகத்தோடும், செயற்பட எண்கணிதம் மனத்தைப் பக்குவப்படுத்துகிறது. இவ்வகையான சிந்தனைப் பழக்கம். வாழ்வில் நமக்கேற்படும் சிக்கல்களுக்குத் தீர்வுகாணப் பெரிதும் பயன்படுகின்றது. கணிதத்தில் ஒருவனுக்கு உள்ளதிறன், அனைத்துத் திறன் களின் தொகுதியே என்று ஆய்வுகள் காட்டியுள்ளன. எண் கணிதத்தில் திறமையானவர்கள் கூர்மையான புத்தி உள்ளவர்களாய் இருப்பதோடு பொதுவாக மற்ற பாடங்களிலும் தேர்ந்தவர்களாக இருப்பர்