பள்ளிக் கலைத்திட்டத்தில் கணிதம் - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Wednesday, October 28, 2020

பள்ளிக் கலைத்திட்டத்தில் கணிதம்

 



                              கலைத்திட்டம்' என்பது கல்வியில் நாம் குறிப்பிட்ட இலக்கினை அடைய வழி நடத்திச் செல்லும் பாதை எனலாம். குறிப்பிட்ட பாடத்தில், கலைத்திட்டம் என்பது ஒரு பாடப்பொருள் மட்டும் அல்லாது கற்றல் வெளிப்பாடுகள், கற்றல் செயல்பாடுகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியது மேலும் ஒவ்வொரு குறிப்பிட்ட கல்வி நிலைகளிலும் - தொடக்க நிலை / நடுநிலை / மேல்நிலை ஒரு குழந்தையின் மனத்தில் வளர்க்க வேண்டிய பண்புசார் நலன்களையும் கலைத்திட்டம் வலியுறுத்துகிறது. மாணவர்களுக்கு எதைக் கற்க வேண்டும் என்ற தெளிவினையும், ஆசிரியர்களுக்கு எதனை, எப்படிக் கற்பிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலையும், தேர்வாளருக்கு எதனைச் சோதிக்க வேண்டும் என்ற நெறிமுறைகளையும் கலைத்திட்டம் நிர்ணயிக்கிறது 

                            கல்விக் கலைத்திட்டத்தில் கணிதம் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. கல்வியாளர்களின் கருத்துப்படி, ஒரு குழந்தையின் அறிவு, மனநிலை, பகுத்தறியும் திறன், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறன் ஆகிய குணநலன்களை வளர்ப்பதுடன் நடைமுறை வாழ்க்கைக்குத் தயார்படுத்தும் கலைக்களஞ்சிய மாகவும் கணிதப்பாடம் அமைகிறது. சுருங்கக் கூறின், ஒரு நாட்டின் வளர்ச்சி, கணிதப் பாடத்தின் வளர்ச்சியைப் பொறுத்தே அமைகிறது எனவும் கூறலாம்


கல்வியின் பல்வேறு படிநிலைகள்


                                      இந்தியாவைப் பொறுத்தவரையில், சில மாநிலங்களில் 4+3+3+2 ஆண்டு பள்ளிக்கல்வி முறையும் சில மாநிலங்களில் 5+ 3 + 2 + 2 ஆண்டு கல்வி முறையும் பின்பற்றப்பட்டு வருகின்றன. நம் மாநிலத்தில் 5 + 3 + 2 + 2 முறையைப் பின்பற்றி வருகிறோம். முதல் 5 ஆண்டுகளில் கற்கும் கல்வியைத் தொடக்கக்கல்வி எனவும், அடுத்த 3 ஆண்டுகள் நடுநிலைக்கல்வி எனவும். அதைத் தொடர்ந்த 2 ஆண்டுகள் உயர்நிலைக்கல்வி எனவும் நடைமுறையில் உள்ளது. கடைசி 2 ஆண்டுகளில் பெறும் கல்வி மேல்நிலைக் கல்வி எனவும் வழங்கப்படுகிறது முதல் பத்தாண்டுகள் வரை பெறும் பொதுக் கல்வி முறையில் கணக்குப்பாடம் ஒரு கட்டாய பாடமாகக் கருதப்படுகிறது இக்காலக்கட்டத்தில், கணிதத்தின் அடிப்படைச் செயல் களையும் அடிப்படைக் கருத்துகளையும் கற்றுத் தருவது மட்டுமல்லாது, உயர்கல்விக்கு அக்குழந்தையைத் தயார் செய்கிறது. பத்தாண்டுகள் பொதுக்கல்வி முடித்து, மேல்நிலைக் கல்வியில் நுழையும் மாணவர்கள் கணிதப் பாடத்தைக் கட்டாயப் பாடமாக இல்லாமல், விருப்பப்பாடமாகப் படிக்கலாம். தான் தேர்ந்தெடுக்கும் உயர் கல்வித்துறைக்கு ஏற்ப கணிதப் பாடத்தை விருப்பப்பாடமாக ஏற்றுக் கொள்ளவோ அல்லது தவிர்க்கவோ செய்யும் உரிமையை மாணவர்கள் பெறுகின்றார்கள். பத்தாண்டு கால பொதுக்கல்வி முறையில் கணிதப் பாடத்தை முக்கியப்பாடமாகப் படிக்கும்போது, பாடக் கருத்துகளுடன் பல்வேறு வளர்ச்சி நெறிகளில் கணிதத்தின் பங்கினையும் மாணவர்கள் அறிகின்றார்கள்.