ஒருவன் சமுதாயத்தின் உயர்மட்டத்தில் வாழ்ந்தாலும் கீழ்மட்டத்தில் வாழ்ந்தாலும் எண்களின் / கணிதத்தின் பயன்பாடு இல்லாமல் அவனால் வாழவே முடியாது. மூச்சு விடுவதைப் போன்ற இயற்கையான நிகழ்ச்சியாகவே, அன்றாட வாழ்க்கையில் கணிதத்தின் பயன்பாடு கருதப்படுகிறது பொறியியலார், தொழிலதிபர், மருத்துவர், வர்த்தகர் வங்கியாளர் போன்ற மேல்மட்டத்திலும், அதிகார வர்க்கத்திலும் உள்ளவர்கள் மட்டுமல்லாமல், தினக்கூலி வாங்குபவர் கூட தான் வாங்கும் கூலியைச் சரிபார்க்கவும், செலவு செய்யவும், ஏன் எதிர்காலத்திற்கென சிறு தொகையைச் சேமிக்கவும் கூட கணக்கைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
எண்ணுதல் எண்களைக் குறித்தல், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் அளவைகள், பொருள்கள் வாங்குதல் / விற்றல், அதனால் எற்படும் லாப, நஷ்டம் ஆகிய கணிதக் கருத்துகள் அன்றாடச் சூழலில் இன்றியமையாததாக விளங்குகின்றன.
அதுமட்டு மன்று. வணிகவியல், வங்கி, வாணிபம், தையல், தச்சு பொறியியல், மருத்துவம், வரி, இன்சூரன்சு போன்ற எத்தொழிலிலும் கணக்கின் பயன்பாடு இன்றி எதுவும் செய்ய இயலாது. சுருங்கக் கூறின், உலகத்தின் எல்லா அன்றாட நிகழ்ச்சிகளுக்கும் அடிப்படை கணக்கே. மற்றொரு நோக்கில் பார்க்கும்போது, கணக்கீடுகளில் தவறு செய்பவர் தன்னுடைய தொழிலில் / வாணிபத்தில் / வர்த்தகத்தில் வெற்றி காணவே முடியாது.
முன் கூட்டியே கணக்கிட்டுத் தொழில் செய்யும் திறமை இருப்பின், பல இடர்களையும், நஷ்டங்களையும் வாழ்க்கையில் தவிர்க்க முடியும். தற்கால நாகரிக அறிவியல் யுகமாகிய கணினி உலகத்தில் நடைபோடும் நாம், செயற்கை மூச்சினால் உயிர் வாழ முடியும். ஆனால் கணக்கின் பயன்பாடு இல்லாமல் நம் வாழ்க்கை இல்லை.