பொதுவாக, கல்வியின் உடனடி நோக்கம் அல்லது நேரடி நோக்கம் அறிவு வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு எனில், அதனின் தொலைநோக்கு மனிதனை நெறிப்படுத்தவும், அவன் மனித நேயத்துடனும், தெளிந்த சிந்தனையுடனும் வாழ வகை செய்வதாகும். இது கல்வியின் மறைமுக நோக்கம் என்றும் கூறலாம். அவ்வாறே, கலைத்திட்டத்தில் கணக்குப் பாடத்தின் பங்கு கணித அறிவு வளர்ச்சி என்று கூறினாலும், மறைமுகமாக பல பண்பாட்டு நெறிகளை வளர்க்கிறது. உதாரணமாக, ஒரு மாணவன் கணக்குச் சிக்கலைத் தீர்ப்பதாகக் கொள்வோம்.
அதற்காக அவன் தேர்ந்தெடுக்கும் படிகள்
1 . தகுந்த கணக்கு கருத்தினைப் பயன்படுத்த முடிவு செய்தல்
2 . கணக்குச் சிக்கலைப் பகுத்தாராய்தல்
3. கொடுக்கப்பட்ட விவரங்களுக்கும், கேட்கப்பட்ட விவரங்களுக்கும் ஒரு தொடர்பினை ஏற்படுத்த முயலுதல் நேரடியாகத் தொடர்பு ஏற்படவில்லை எனில் அதற்கான வழிமுறைகளை ஆராய்தல்
4 . கணக்கிட்டு, கணக்குச் சிக்கலைத் தீர்த்தல்.
5 . ஒவ்வொரு படியிலும் தான் செல்லும் பாதை சரியானது தானா என உறுதி செய்து கொள்ளல் முடிவு சரியானது தானா என்று தகுந்த வழிமுறைகளில் சரிபார்த்தல்
மேற்கண்ட சிக்கலை விரைவாகவும், துல்லியமாகவும் பதற்றமின்றியும் செய்து முடித்தல்
இந்தப் படிகளில் எந்த நிலையில் மாணவனிடம் தொய்வு ஏற்பட்டாலும் அவளால் அந்த கணக்கிற்குச் சரியான தீர்வு காண முடியாது. இந்தப் பயன்பாடு வாழ்க்கைச் சிக்கலைத் நீர்ப்பதற்கும் அம்மாணவனுக்கு உதவுகின்றது. மேலும் கணக்குப் பாடத்தில் உள்ள எந்த விதியும் நூற்றுக்கு நூறு சதவீதம் எல்லா நிலைகளிலும் உண்மையாக இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அங்கு ஐயத்திற்கு இடமென்பதே கிடையாது. இந்த உண்மை நிலை, வாழ்க்கையில் தான் செய்யும் எந்தக் காரியத்திலும் தவறுபடாத சரியான முடிவை எட்ட உதவுகின்றது மேலும், கோயிற்சிற்பங்கள், கலைக்கூடங்கள், கட்டிடக் கலை ஆகியவற்றில் உள்ள கலைநுணுக்கம், சமச்சீர்த்தன்மை, பயன்படுத்தப்பட்ட வடிவியல் உருவங்கள், அமைப்புகள் அனைத்திலும் கணிதவியலின் பயன்பாடு பிரதிபலிக்கிறது அது மட்டுமன்று. அறிவியற் சிந்தனை வளர்ச்சியிலும் பண்பாட்டு வளர்ச்சியிலும் கணித வளர்ச்சியே அடித்தளமாக விளங்கி, மனிதனின் வாழ்க்கை நெறியை மேம்படுத்துகிறது.