குடியரசு தின விழா - குடியரசு என்றால் என்ன? - AsiriyarseithiTVM - Educational Website

Latest

Search This Blog

Tuesday, January 24, 2023

குடியரசு தின விழா - குடியரசு என்றால் என்ன?








 Republic Day in Tamil

மக்களே தங்களை ஆள்பவர்களைத் தேர்வு செய்யும் உரிமை கொண்டுள்ள அமைப்பு ‘ஜனநாயகம்‘ (Democracy) என்று அழைக்கப்படுகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தில் இருக்கும் அரசு அமைப்பு ‘குடியரசு’ (Republic) எனப்படுகிறது.


குடியரசு நாள் என்றால் என்ன? ஏன் கொண்டாடப்படுகிறது?


இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாள் குடியரசு நாள் ஆகும்.


இந்திய அரசமைப்புச் சட்டம் என்பது இந்தியாவின் ஆட்சி நிர்வாகத்திற்கான விதிகளைக் கொண்டுள்ள ஆவணம் ஆகும். அதற்கு முன் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்திய அரசுச் சட்டம், 1935 (Government of India Act , 1935) இந்த தகுதியைப் பெற்றிருந்தது. சுதந்திரம் அடைந்த பின்னரும் மேற்கண்ட சட்டத்தின் அடிப்படையிலேயே இந்தியாவில் சட்டங்கள் இயற்றப்பட்டன. அரசு நிர்வாகத்துக்கும் அச்சட்டமே அடிப்படையாக இருந்தது. அந்த சட்டம் நீக்கப்பட்டு, சுதந்திர இந்தியாவின் அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் (Constituent Assembly) ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசமைப்புச் சட்டம் அமலான நாள் குடியரசு நாளாகக் கொண்டாடப்படுகிறது. 


இந்தியா எப்பொழுது அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டது?

1947 ஆகஸ்டு 29 அன்று பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் தலைமையில் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது. அம்பேத்கர் தலைமையிலான அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவால் (Drafting Committee) உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம், 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமையாக 1950, ஜனவரி 26 அன்றுதான் அமலுக்கு வந்தது என்றாலும், குடியுரிமை, தேர்தல், இடைக்கால அரசு, இடைக்கால நாடாளுமன்றம் உள்ளிட்டவை குறித்த சரத்துகள் உடனடியாக அமலுக்கு வந்தன.


ஜனவரி 26ஆம் தேதி குடியரசு நாளாக எப்படி ஆனது?

1929 டிசம்பரில், பிரிக்கப்படாத இந்தியாவின் லாகூர் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பூர்ண சுதந்திர (முழு விடுதலை) தீர்மானம் நிறைவேறியது. 1930 ஜனவரி 26 அன்று, ஆண்டுதோறும் அந்தத் தேதியை விடுதலை நாளாக அனுசரிக்க நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது.


இந்தியா விடுதலை அடைந்த பின்னர் ஜனவரி 26 அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வரும் குடியரசு நாளாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது.


குடியரசு நாள் அணிவகுப்பு எங்கு தொடங்கும்? எந்த இடத்தில் முடியும்?

ஆண்டுதோறும் குடிரசு நாள் அணிவகுப்பு டெல்லி ராஜபாதையில் நிகழும். குடியரசுத் தலைவர் மாளிகையில் தொடங்கி, இந்தியா கேட் வரை நடக்கும்.1950 முதல் ஆண்டுதோறும் இந்த அணிவகுப்பு நிகழ்கிறது.


குடியரசு நாள் அணிவகுப்பின் மரியாதையை யார் ஏற்றுக்கொள்வார்?

இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதியான (Commander-in-Chief) இந்தியக் குடியரசுத் தலைவர் குடியரசு நாள் அணிவகுப்பில் அளிக்கப்படும் மரியாதையை ஏற்றுக்கொள்வார்.


மாநில தலைநகரங்களில் யார் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவார்கள்?

1973 வரை மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில ஆளுநர்தான் குடியரசு நாள், விடுதலை நாள் ஆகிய இரு கொண்டாட்டங்களின்போதும் தேசியக் கோடியை ஏற்றினார்கள்.


அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றுவதைப் போல மாநில முதல்வர்களும் விடுதலை நாள் கொண்டாத்தின்போது கொடியேற்ற வேண்டும் என்று பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடம் வலியுறுத்தினார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்திய மாநிலத் தலைநகரங்களில் மாநில அரசு சார்பாக நடக்கும் குடியரசு நாள் கொண்டாட்டங்களில் 1974 முதல் ஆளுநர்களும், விடுதலை நாள் கொண்டாட்டங்களில் மாநில முதல்வர்களும் கொடி ஏற்றுகின்றனர். வேறு நாட்டு அரசின் தலைவர் (பிரதமர் அல்லது அதிபர்) இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராகப் பங்கேற்பார். 


பாசறை திரும்புதல்’ (beating retreat) எங்கு நடக்கும்?

குடியரசு நாள் அணிவகுப்பில் கலந்துகொண்ட முப்படை வீரர்களும் தங்கள் முகாமுக்கு திரும்பும் நிகழ்வு ‘பாசறை திரும்புதல்’ எனப்படும்.


குடியரசு நாள் கொண்டாட்டங்கள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் இந்த நிகழ்வு, ஆண்டுதோறும் ஜனவரி 29, மாலை இந்திய நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை அருகே அமைந்துள்ள விஜய் சவுக்கில் நடக்கும்.